இந்தியாவில் ஹெல்த்கேர், ஐடி, சேவை துறை தரவுகளை டார்கெட் செய்யும் சைபர் குற்றவாளிகள்
பெங்களூரு: இந்தியாவில் ஹெல்த்கேர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவை துறை நிறுவனங்களை சைபர் குற்றவாளிகளின் டார்கெட் அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாசிட்டிவ் டெக்னாலஜிஸ் என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் அரங்கேறும் சைபர் தாக்குதல்களில் 80 சதவீதம் நிறுவனங்களை டார்கெட் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் 36 சதவீதம் பொதுத்துறை மற்றும் 13 சதவீதம் தொழில் துறையை சைபர் குற்றவாளிகள் டார்கெட் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹெல்த்கேர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவை துறை நிறுவனங்கள் மீது சைபர் குற்றவாளிகளின் டார்கெட் அதிகரித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் நுட்பம் வளர்ச்சி கண்டுள்ளதும், தொழில்நுட்பம் மற்றும் ஏஐ சார்ந்த முதலீடு அதிகரித்து வருகிறது. அதனால் இந்திய தகவல் உள்கட்டமைப்பு சைபர் குற்றவாளிகளின் பிரதான டார்கெட் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023-ல் நாட்டில் சைபர் தாக்குதல்கள் 15 சதவீதம் அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை காட்டிலும் 46 சதவீதம் அதிகரித்துள்ளது என ஆய்வில் தகவல்.
சைபர் குற்றவாளிகள் களவாடும் தரவுகளில் ரகசிய விவரங்கள், தனிப்பட்ட நபர்களின் விவரங்கள், வர்த்தக ரகசியங்கள் அதிகம் உள்ளதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மால்வேர் மற்றும் சோசியல் இன்ஜினியரிங் மூலம் தரவுகளை அவர்கள் களவாடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.