தமிழ்நாடு

அமரன் Review: சிவகார்த்திகேயனின் ‘புதிய’ பாய்ச்சல் எப்படி?

2014-ம் ஆண்டு காஷ்மீரில் தீவிரவாதிகள் உடனான மோதலில் வீரமரணம் அடைந்த சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியாகியுள்ள படம் ‘அமரன்’.

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க, சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார் என்ற அறிவிப்பு வந்ததுமே இப்படத்துக்கான எதிர்பார்ப்பும் அதிகமானது. அது படத்தின் டிக்கெட் முன்பதிவிலும் எதிரொலித்ததை பார்க்க முடிந்தது. இத்தகைய எதிர்பார்ப்புடன் தீபாவளி ரேஸில் களமிறங்கிய ‘அமரன்’ அதை பூர்த்தி செய்ததா என்று பார்க்கலாம்.

படத்தின் ஒன்லைன் ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்ததுதான். சென்னையை அடுத்த தாம்பரத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன் (சிவகார்த்திகேயன்) என்ற இளைஞர், ராணுவத்தில் சேர்ந்து கேப்டன், பின்னர் மேஜர் என படிப்படியாக பெரிய பொறுப்புகளை அடைந்து காஷ்மீரில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட 44-வது ராஷ்டிரிய ரைபிள்ஸ் குழுவில் இணைகிறார். முன்னதாக தனது நீண்டநாள் காதலியான இந்துவின் (சாய் பல்லவி) பெற்றோரை சமாதானம் செய்து திருமணம் செய்து கொள்கிறார். இருவருக்கும் இடையேயான காதல் வாழ்க்கை, இன்னொரு பக்கம் காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான முகுந்தின் அதிரடிகள், இறுதியில் நாட்டைக் காக்க வீரமரணம். இதுதான் ‘அமரன்’ படத்தின் கதை.

பொதுவாக ‘பயோபிக்’ என்று வரும்போது படம் வெளியாவதற்கு முன்பே அதன் கதை ஆடியன்ஸுக்கு தெரிந்திருக்கும். அதுவும் இந்த சமூக வலைதள காலகட்டத்தில் ட்ரெய்லரை வைத்தே ‘டீகோடிங்’ என்ற பெயரில் ரசிகர்கள் அக்குவேறு ஆணிவேறாக கதையை பிரித்து மேய்ந்துவிடுவார்கள். அதையும் தாண்டி ஒரு பயோபிக்கை கையில் எடுத்துக் கொண்டு அதில் வெற்றி பெறவேண்டும் என்றால் அதற்கு ரசிகர்களை கட்டிப் போடும் திரைக்கதையால் மட்டுமே முடியும். அந்த வகையில் தான் எடுத்துக் கொண்ட கதைக்களத்துக்கு நியாயம் செய்யும் ஒரு நேர்த்தியான திரைக்கதையுடன் களமிறங்கி இருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.

படத்தின் முதல் பாதி முழுவதுமே முகுந்த் – இந்து இடையேயான காதல் காட்சிகளைக் கொண்டே நகர்கிறது. அவை எந்த இடத்திலும் ஓவர் டோஸ் ஆகிவிடாதபடி சிறப்பாகவே எழுதப்பட்டிருக்கின்றன. படத்தின் ஆரம்பத்தில் சாய் பல்லவியின் அறிமுகக் காட்சி தொடங்கி கேரளாவில் சாய் பல்லவி வீட்டுக்கு சிவகார்த்திகேயன் வந்து அவரது பெற்றோரை சமாதானப்படுத்தும் காட்சிகள் வரை ‘காதல்’ காட்சிகள் ஈர்க்கின்றன. இது ‘போர்’ தொடர்பான படத்தைத் தாண்டி ஒரு ‘காதல்’ படம் என்று படக்குழு விளம்பரப்படுத்தியதற்கான நியாயத்தை இந்த காட்சிகளில் உணர முடிகிறது. படத்தின் பலமே இவைதான் என்று சொல்லக்கூடிய அளவுக்கு நேர்த்தி.

சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் நிச்சயம் ஒரு புதிய பாய்ச்சல் என்று சொல்லலாம். இதற்கு முன்பும் அவர் சில சீரியஸ் கதாபாத்திரங்களை பரிசோதனை முயற்சியாக செய்திருந்தாலும், இதில் அவரின் நடிப்பில் வெளிப்படும் முதிர்ச்சி குறிப்பிடத்தக்கது. உடல் ரீதியாகவும் நடிப்பிலும் அவர் காட்டியிருக்கும் புதிய பரிணாமம் வியப்பை தருகிறது. ஹீரோவை விடவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் சாய் பல்லவிக்கு. முகுந்தின் மனைவி இந்து ரெபக்கா வர்கீஸ் என்றால் இனி சாய் பல்லவியின் முகம்தான் நினைவுக்கு வரும் என்ற அளவுக்கு வெகு சிறப்பான நடிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button